டந்த சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், வடநாட்டைச் சேர்ந்த இளைஞர், ரயில்வே குடியிருப்பில் வைத்து போதை நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அதே ரயில்வே ஸ்டேஷனில் துணி வியாபாரி ஒருவர் தாக்கப்பட்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

Advertisment

இந்நிலையில் மீண்டும் போதை ஆசாமிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்ட சம்பவமும், அதே போல், பட்டியலின சமூகத்தினரின் வீடுகளை சூறையாடிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி, திருவள்ளூர் மாவட்ட மக்களிடையே அச்சமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவள்ளூர் ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்கள் கேசவமூர்த்தி, சுகுமார் ஆகிய மூன்று பேரும், கடந்த ஜனவரி 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, பொங்கலை முன் னிட்டு திருவள்ளூர் அருகே ஆந்திர மாநிலத்தி லுள்ள கோனே பால்ஸ்லிக்கு சென்றுவிட்டு திரும்புகையில், ஒண்டிக்குப்பம் பகுதியில் டூவீலரில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா போதை ஆசாமிகள் நான்கு பேர், இரண்டு டூவீலரின் எதிரே, பார்த்திபனின் டூவீலரை மோதுவதுபோல் வந்தனர். அவர்களிடம், "ஏன் இடிப்பதுபோல் வேகமாக வருகிறீர்கள்?'' என பார்த்திபனும், சுகுமாரும் கேட்டிருக்கிறார்கள். 

இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், சாலையிலிருந்த கூரான கற்களை எடுத்து சுகுமார், பார்த்திபன், கேசவமூர்த்தி மீது சரமாரியாக அடித்ததில் மூவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு, பார்த்திபன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். 

Advertisment

இதையறிந்த நான்கு பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், மணவாளநகர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குவந்து, பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, காயமடைந்த இருவரையும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர். இவர்களில் சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மணவாள நகர் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் வங்கி ஊழியர், இன்னொருவர் நிதிநிறுவன ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட பார்த்திபன், சுகுமாரின் உறவினர்கள், திருவள்ளூர், ஒண்டிக்குப்பம் விநாயகர் கோயிலருகே நெடுஞ்சாலையில் அமர்ந்து, கொலை யாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த கொலை தொடர்பாக அப்பகுதியிலிருந்த சிலர் வீடியோப்பதிவு செய்திருக்க, அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட போலீசார், ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த நீலகண்டன், ஜோதிஷ், வினோத்குமார், ஜவகர் ஆகிய நால்வரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருத்தணியருகே கஞ்சா போதையில் இருளர் இன மக்களின் வீடுகளை சூறையாடிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணியருகே தாழவேடு இருளர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அக்னவரும் கூலித் தொழிலாளர்கள். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கஞ்சா போதையில் இப்பகுதிக்கு வந்த கும்பல் ஒன்று, கத்தி, இரும்புக்கம்பிகளால் இங்குள்ள வீடுகளை அடித்துநொறுக்கியதோடு, ராமசாமி என்பவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றது. படுகாயமடைந்த முதியவர் ராமசாமியை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் விசாரணை மேற்கொண்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா போதை இளைஞர்களை, சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து தேடியநிலையில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் மற்றும் 17 வயது சிறுவர்கள் என மொத்தம் மூன்று பேரோடு, முருகம்பட்டு காலனியை சேர்ந்த சரவணன், திருத்தணி அமிர்தாபுரத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய நாகராஜ் என்பவர் தலைமறைவாகியுள்ளதாகவும், போலீசார் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் மூன்று பேரையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சரவணன், கார்த்திக் ஆகியோரை திருத்தணி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

சமீப காலங்களில் திருத்தணியில் கஞ்சா போதை குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதும், கொலை வெறி தாக்குதல்களை நடத்துவதும் பொதுமக்களிடையே பீதையை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதைப் பொருட்கள் பயன்பாட்டை கண்காணித்து கட்டுப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை இதில் மந்தமாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.